திருவேங்கடம் அருகே அக்காள்-தங்கை வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

திருவேங்கடம் அருகே அக்காள்-தங்கை வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-14 22:07 GMT
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அத்திப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 40). முத்துமாரியின் சகோதரி சீதாலட்சுமி (43). இவருடைய கணவர் மாரிமுத்து வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். 

அக்காள், தங்கை இருவரின் வீடும் அருகருகே உள்ளது. அவர்கள் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வந்தனர். கொரோனோ ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி ஆலை மூடப்பட்டதால் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் முத்துமாரி, சீதாலட்சுமி ஆகிய இருவரும் வழக்கம்போல் வயல் வேலைக்கு சென்று விட்டனர். குருமூர்த்தி கடைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் மதியம் முத்துமாரி சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதேபோல் சீதாலட்சுமி வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இதுகுறித்து குருவிகுளம் போலீசில் முத்துமாரி, சீதாலட்சுமி குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
பட்டப்பகலில் 2 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குருவிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்