விற்ற நிலத்தை விலைக்கு வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி 3 பேர் கைது

விற்ற நிலத்தை விலைக்கு வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-14 21:07 GMT
சேலம்:
விற்ற நிலத்தை விலைக்கு வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றப்பிரிவு போலீசில் புகார்
சேலம் ரெட்டியூரை சேர்ந்தவர் வேலு. தொழில் அதிபரான இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கரூரை சேர்ந்த பாலு (வயது 44), நல்லுசாமி (37). சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (76) ஆகியோர்  உள்பட சிலர் சேர்ந்து கரூரில் 6 ஏக்கர் 89 சென்ட் நிலம் உள்ளது, அந்த நிலத்தை விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்று என்னிடம் ஆசை வார்த்தை கூறினர். 
இதையொட்டி ரூ.6 கோடியே 40 லட்சத்துக்கு நிலம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 2.9.2018 அன்று அதற்கான கமிஷன் தொகை ரூ.80 லட்சம் பெற்றுக்கொண்டனர். 
3 பேர் கைது
பின்னர் நிலத்தை விற்பனை செய்வற்கான ஆவணம் தயாரிப்பதாக கூறி ரூ.80 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நிலத்தை கிரையம் செய்ய போகும்போது அந்த நிலம் ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
எனவே நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த போலீசார் பாலு, சண்முகசுந்தரம், நல்லுசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்