சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத டீக்கடைக்கு ‘சீல்’
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மருந்து கடை உள்பட 3 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
கொரோனாவால் பாதிப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருப்பதால், கடைவீதிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நிற்கும் நிலை உள்ளது. இவ்வாறு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
கடைக்கு ‘சீல்’
இந்நிலையில் நேற்று கடைவீதிகளில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்கு ரோடு அருகே ஒரு டீக்கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பலரும் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த டீக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் கடைவீதிகளில் தடையை மீறி கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்த ஜவுளிக்கடை, நகைக்கடை, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மருந்து கடை ஆகிய 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் அபராதம் விதிப்பதுடன், கடையை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று கடைவீதியில் உள்ள கடைக்காரர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.