நகைக்கடையில் இருந்து வெளியேறி ஓடிய வாடிக்கையாளர்கள்
அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை அறிந்து நகைக்கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறி ஓடினார்கள்.;
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத, விதிமுறைகளை மீறிய கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் நேற்று அட்சய திரிதியையை முன்னிட்டு ஒரு சில நகைக்கடைகள் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. கடையின் கதவு(ஷட்டர்) கால் பகுதி திறக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நகை வாங்க கடைகளுக்குள் சென்றிருந்தனர். அவர்கள் கடைகளுக்குள் இருந்தபோது, அதிகாரிகளின் ஆய்வு பற்றிய தகவல் தெரிந்தவுடன், குறைந்த அளவே திறக்கப்பட்டிருந்த கடை கதவின் (ஷட்டர்) இடையே புகுந்து ஆண்களும், பெண்களும் வெளியேறி அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்திலேயே ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று அதிகரித்து, உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் இருப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.