சேரன்மாதேவி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை திடீர் சாவு
சேரன்மாதேவி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை திடீரென்று இறந்தார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே பத்தமடை மங்கையர்கரசி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் திருச்சுணன். இவருடைய மகன் மதியழகன் (வயது 32). இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சேரன்மாதேவி சுண்ணாம்புக்கல் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகள் காஜல் (24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, மதியழகன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் காலை உணவு சாப்பிட்டார். பின்னர் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மதியழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.