ரம்ஜான் பண்டிகை: வீடுகளில் எளிமையாக தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி எளிமையாக கொண்டாடினர்.
நெல்லை:
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்ைகயாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன.
இதனால் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மிகவும் எளிமையாக தங்களது வீடுகளிலேயே ெதாழுகை நடத்தி கொண்டாடினார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டு மாடியில் நின்றும் தொழுகை நடத்தினர். சிலர் தெருக்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று தொழுகை நடத்தினர். புத்தாடை அணிந்து ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்திய முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மேலப்பாளையத்தில் ஜின்னா திடல், பஜார் திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பள்ளிவாசல்களிலும் கூட்டு தொழுகை நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக அந்த மைதானங்களில் தொழுகை நடத்தப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.