தம்பதி-மகன் கொரோனாவுக்கு சாவு
பெலகாவியில் தம்பதி-மகன் கொரோனாவுக்கு சாவு;
பெலகாவி:
பெலகாவி டவுனில் வசித்து வந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகன் பிரசாந்த். இவர்கள் 3 பேருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 3 பேருக்கும் கொரோனா அறிகுறியும் தென்பட்டது.
இதனால் அவர்கள் பெலகாவி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர். மேலும் தங்களை கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தி இருந்தனர். இதில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.
இதையடுத்து 3 பேரும் சிகிச்சைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவும், நேற்று முன்தினம் பார்வதியும் உயிரிழந்தனர்.
பிரசாந்த்துக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் நேற்று இறந்தார். அவரது உடலை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். கொரோனாவுக்கு தம்பதி-மகன் என ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.