வீடுகளில் ரம்ஜான் தொழுகையை நடத்திய முஸ்லிம்கள்

முழு ஊரடங்கையொட்டி வீடுகளில் ரம்ஜான் தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினர்.

Update: 2021-05-14 18:37 GMT
காரைக்குடி,

முழு ஊரடங்கையொட்டி வீடுகளில் ரம்ஜான் தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் பொதுவான இடத்தில் ஒன்று கூடும் முஸ்லிம்கள் அங்கு சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே எளிமையான முறையில் தொழுகை நடத்தி கொண்டாடினர்.

சிறப்பு தொழுகை

 ரம்ஜான் பண்டிகையொட்டி நேற்று காலை 6.15 மணிக்கு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையான்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி எளிமையாக கொண்டாடினர். ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் அக்கம், பக்கத்தினரை அழைத்து வந்து பிரியாணி விருந்து வைத்து உபசாரம் செய்வது வழக்கம். கடந்தாண்டும், இந்தாண்டும் கொரோனா தொற்று காரணமாக இந்த விருந்து உபசாரம் நடைபெறவில்லை.
 இதுகுறித்து காரைக்குடி நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அப்பாஸ் கூறியதாவது:-
கடந்தாண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகையை அரசு அறிவிப்பின்படி வீடுகளில் இருந்தே கொண்டாடி வருகிறோம். அதேபோல் இந்தாண்டும் கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டும், அரசு அறிவித்தன் பேரில் நேற்று வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்