வீட்டு சுவர் இடிந்து விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி

அருமனை அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி

Update: 2021-05-14 18:11 GMT
அருமனை:
அருமனை அருகே காரோடு பகுதியை சேர்ந்தவர் டைலஸ். இவருடைய மனைவி மேரி ஜெசிந்தா. இவர்களின் மகன் யூஜின் (வயது 36). இவர் கூலி வேலைக்கு செல்வதோடு, சட்டக்கல்லூரியிலும் படித்து வந்தார்.
குமரி மாவட்டத்தில் நேற்று அடை மழை பெய்தது. இதனால் ஆறு, குளங்களில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. இந்தநிலையில் நேற்று மாலை யூஜின் மட்டும் வீட்டில் இருந்தார். தாய்-தந்தையர் வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. இதில் யூஜின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்ததும், தாய்-தந்தையர் வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். யூஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்