பொறையாறு போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

கார் மோதி வியாபாரி பலியானார். இதுதொடர்பான வழக்கில் பா.ம.க. பிரமுகர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பொறையாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-14 18:06 GMT
பொறையாறு:
கார் மோதி வியாபாரி பலியானார். இதுதொடர்பான வழக்கில் பா.ம.க. பிரமுகர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பொறையாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார் மோதி கீரை வியாபாரி பலி
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சிங்கானோடை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிவேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கீரை வியாபாரியான ஆணைக்கோவில் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. மாநில அமைப்பு துணை தலைவர் முத்துக்குமார் என்பவரை கைது செய்து, பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய முத்துக்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரியும், இறந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும், முத்துக்குமார் மீது விபத்து வழக்கு மட்டும் பதிவு செய்து, ஒரே நாளில் ஜாமீனில் விடுவித்த பொறையாறு போலீசாரை கண்டித்தும் போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சுப்ரமணியன் உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுனர்கள் துரைராஜ், ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், மார்க்ஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
பாதுகாப்பு பணியில்
தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவபிரியா, மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்