தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
திருமக்கோட்டையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இ்டிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
திருமக்கோட்டை:
திருமக்கோட்டையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இ்டிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கூலித்தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை நல்லான்பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராமேஸ்வரி(34). இவர்களுக்கு யாழினி(11) என்ற மகளும், தரன்(8) என்ற மகனும் உள்ளனர். அதே தெருவில் காணிக்கை என்பவர் பழைய தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு காணிக்கை என்பவரின் தொகுப்பு வீட்ைட இடிக்கும் பணியில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டார். அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
மேற்கூரை இடிந்து சாவு
இதில் கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கிய பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக காரில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்தபோது பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.