தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 180 பேருக்கு கொரோனா மாவட்ட அளவில் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது
தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 180 பேருக்கு கொரோனா மாவட்ட அளவில் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால்(வயது 38). இவருக்கு காய்ச்சல் இருந்ததால் தியாகதுருகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையொட்டி அவர் தியாகதுருகம் போலீஸ் நிலைய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதேபோல் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ரங்கராஜன் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் குமார், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 7 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே தொற்று பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 980 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 180 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,831-ல் இருந்து 15,011-ஆக உயர்ந்துள்ளது.