கொரோனாவுக்கு 5 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர். புதிய உச்சமாக 679 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24,403 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 148 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 21,603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே படப்பை கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வாலிபரும், மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கே.கே. சாலையை சேர்ந்த 61 வயதுடைய முதியவரும், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவரும் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 148-ல் இருந்து 153 ஆக உயர்ந்துள்ளது.
புதிய உச்சமாக 679 பேருக்கு தொற்று
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 679 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,082 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 247 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21,850 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,079 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.