தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது. இதை கண்காணிக்க 7 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள் சுமார் 300 பேர் ஆலையில் இரவு பகலாக பணியாற்றினர். ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள அனைத்து மோட்டார்களும் இயக்கி பரிசோதிக்கப்பட்டன. உற்பத்தி நிலையம் முழுமையாக பராமரிக்கப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி
அதன்பிறகு சோதனை ஓட்டம் தொடங்கியது. இதில் வெற்றிகரமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதன. அதன்படி மருத்துவ பயன்பாட்டுக்காக சுமார் 5 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆக்சிஜன் 98.6 சதவீதம் சுத்த தன்மை கொண்டதாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக ஆலை தரப்பினர் தெரிவித்தனர். இந்த 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யப்படும் என்று கருதப்பட்டது.
‘திடீர்’ பழுது
இந்த நிலையில் திடீரென ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பழுது காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிரூட்டும் பகுதியில் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் பழுதை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று ஆக்சிஜன் உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து என்ஜினீயர்கள் நேற்றிரவு முதல் செயல்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் உள்ள எந்திரங்களை பரிசோதனை செய்து பழுது நீக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிய 3 நாட்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
விரைவில் உற்பத்தி தொடங்கும்
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் கொள்கலன் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் 3 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பணிகளும் நடைபெறாமல் மூடியே கிடந்ததால் சிறு சிறு தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்டது தான். இதனால் முதல் நாளில் இருந்தே தொழில்நுட்ப வல்லுநர் குழு உற்பத்தி நிலையத்திலேயே இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து ஆக்சிஜன் உற்பத்தியை விரைவாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எனவே, விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சுமார் 5 டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் அனுப்பும் பணி தொடங்கிய நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.