ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடிய முஸ்லிம்கள்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி எளிமையாக கொண்டாடினர்.
விழுப்புரம்,
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகை ரமலான் மாத இறுதியில் (பிறை தெரிவதை கணக்கிட்டு) கொண்டாடப்படுகிறது. எனவே இஸ்லாமிய மாதங்களில் இந்த ரமலான் மாதம் புனிதமிக்க மாதமாக கருதப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையன்று காலை சிறப்பு தொழுகை முடிந்த பிறகு தம்மை சுற்றியுள்ள ஏழை, எளியவர்களுக்கு தானதர்மங்கள் செய்தும், தங்களது உறவினர்களுக்கும், உற்ற நண்பர்களுக்கும் தம்மால் இயன்ற சிறப்பு விருந்தும் அளிப்பார்கள். இதனால்தான் ரம்ஜான் பண்டிகையை ஈகைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
பள்ளிவாசல்கள் மூடல்
ரமலான் மாதம் முழுவதும் அதாவது 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். நோன்பு ஆரம்பிக்கும்போதும், நோன்பை நிறைவு செய்யும்போதும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று கூட்டுத்தொழுகையில் ஈடுபடுவார்கள். ஆனால் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதன் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ரமலான் மாதமும் தொடங்கியது. வழக்கம்போல் இந்த ஆண்டும் முஸ்லிம்கள், ரமலான் மாத நோன்பை உலகம் முழுவதும் கடைபிடித்தார்கள். அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இந்த நோன்பை முஸ்லிம்கள் கடைபிடித்தனர். காலை, மாலை தொழுகைகளை அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வந்தனர்.
வீடுகளில் நடந்த தொழுகை
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வழக்கமாக காலையில் பள்ளிவாசல்கள், மைதானங்கள் போன்றவற்றில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக்கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கூட்டமாக கூடி நின்று வழிபாடுகள், தொழுகைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பள்ளிவாசல்கள், மைதானங்களில் தொழுகைகள் நடைபெறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே மிகவும் எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ஒவ்வொரு வீட்டிலும் அந்தந்த குடும்ப தலைவர் தலைமையில் தொழுகைகள் நடந்தன. அங்கு முஸ்லிம்கள் தங்களது குடும்பத்தினரோடு சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வீடுகளில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதால் அவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
வாழ்த்து பரிமாற்றம்
தொழுகைகள் முடிந்ததும் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சமைத்து சாப்பிட்டதோடு உறவினர்கள், நண்பர்களுக்கும் அதனை கொடுத்து மகிழ்ந்தனர். இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவரும் புத்தாடைகள் அணிவார்கள். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்த பலர் புத்தாடைகள் வாங்க முடியாததால் தங்களுடைய தகுதிக்கேற்ப இந்த பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். அதேபோல் பள்ளிவாசல்கள், மைதானங்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்தி முடித்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். ஆனால் அதற்கு இந்த ஆண்டு கொரோனா இடமளிக்காததால் நேருக்கு நேர் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியாதவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போன்களில் வாட்ஸ்-அப், முகநூல் மூலமாக வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
புதிய அனுபவம்
இதுகுறித்து முஸ்லிம்கள் கூறுகையில், பள்ளிவாசல் செல்லாமல் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. வழக்கமாக பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகைகளாக இருந்தாலும் சரி, மைதானங்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளாக இருந்தாலும் சரி இமாம்தான் தொழுகையை நடத்துவார். ஆனால் இந்த ஆண்டு அவர் இடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப தலைவர் இருந்து தொழுகையை நடத்தியிருக்கிறார்கள். இது எங்களுக்கு புதிய அனுபவத்தை தந்துள்ளது என்றனர்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை அன்று செஞ்சிக்கோட்டையில் உள்ள மசூதி மற்றும் செஞ்சி செட்டிபாளையம் மைதானத்தில் முஸ்லிம்கள் ஒன்றாக கூடி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது குடும்பத்துடன் செஞ்சியில் உள்ள அவரது வீட்டில் தொழுகை நடத்தி, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்.