மதுரையில் மேலும் 1,250 பேரை கொரோனா தாக்கியது
மதுரையில் நேற்று புதிதாக 1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர்.
மதுரை,மே
மதுரையில் நேற்று புதிதாக 1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ்
மதுரையில் நேற்று 8 ஆயிரத்து 850 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,250 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 815 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 746 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 480 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 36 ஆயிரத்து 86 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது, 8 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
11 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்றும் மதுரையில் 11 பேர் உயிரிழந்தனர். 54, 49, 49, 44, 56 வயது ஆண்கள், 69, 80, 65 வயது முதியவர்கள் மற்றும் 55, 40 வயது பெண்கள், 62 வயது மூதாட்டி ஆகியோர் இறந்தனர். அவர்களில் 4 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் ரெயில்வே ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்ததுடன், வேறு சில இணை நோய்களும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647 ஆக உயர்ந்துள்ளது.
விழிப்புணர்வு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனாவின் 2-வது அலை மிக கடுமையாக இருக்கிறது. அதிலும் கடந்த சில தினங்களாக அதிக அளவில் பாதிப்புகள் பதிவாகி இருக்கிறது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடித்தால் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
இதுபோல், தகுதி உள்ளவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் கொரோனா பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.