காய்கறிகளுக்கு விலையில்லை
உடுமலை பகுதியில் பந்தல் காய்கறிகளுக்கு போதிய விலையில்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் பந்தல் காய்கறிகளுக்கு போதிய விலையில்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காய்கறிகள் சாகுபடி
உடுமலை பகுதியில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அத்துடன் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. பந்தல் அமைப்பதற்கு பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டியதிருப்பது தான் பந்தல் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடாததற்குக் காரணமாகும்.
ஆனாலும் பந்தல் காய்கறிகளுக்கு ஓரளவு நல்ல விலை கிடைப்பதால் ஒருசில விவசாயிகள் பந்தல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது பந்தல் காய்கறிகளுக்கும் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பந்தல் காய்களைத் தவிர்த்து மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வைரஸ் தாக்குதல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
பந்தல் காய்கறிகளில் பாகற்காய் சாகுபடியில் வைரஸ் தாக்குதல் அதிக அளவில் ஏற்படும். இதனால் மருந்து தெளிப்பதற்கே பெருமளவு செலவு செய்ய வேண்டியதுள்ளது. ஆனால் பாகற்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.15 வரையே விற்பனையாகிறது. இது கட்டுப்படியாகாத விலையாகவே உள்ளது. அதேநேரத்தில் புடலங்காய் ஒரு கிலோ ரூ.5 க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. இதேநிலைதான் பீர்க்கங்காய்க்கும் உள்ளது.
எனவே ஒருசில விவசாயிகள் பந்தல் சாகுபடியைக் கைவிட்டு விட்டார்கள். ஆனால் கல் தூண் அமைத்து கம்பிகள் மூலம் பல லட்சங்கள் செலவு செய்து பந்தல் அமைத்து விட்டு அதனைப் பிரித்தால் வீணாகி விடும். இதனால் அதிக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பந்தலைப் பிரிக்காமல் அப்படியே சாகுபடி எதுவும் செய்யாமல் விட்டுள்ளார்கள். ஆனால் குறைந்த அளவு நிலத்தை மட்டுமே நம்பி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அப்படி விடமுடியவில்லை. பந்தலுக்குள்ளேயே சின்ன வெங்காயம் சாகுபடி செய்கிறோம். பந்தலுக்குள் டிராக்டர் மூலம் உழவு ஓட்டுவது சற்று சிரமமான விஷயமாகவே இருக்கிறது. இருந்தாலும் சிரமத்துக்கு மத்தியில் மாற்றுப் பயிர் சாகுபடி மேற்கொண்டுள்ளோம். மீண்டும் பந்தல் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் சமயத்தில் இதே பந்தலில் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.