ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் டிரோன் கேமராவில் கண்காணித்து போலீசார் எச்சரிக்கை

ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்த நபர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் முக்கிய பகுதியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-14 15:42 GMT

திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ந்தேதி முதல் முழுஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, இறைச்சி ஆகியவற்றின் கடைகள் மதியம் 12 மணியோடு அடைக்கப்படுகின்றன.
இதையொட்டி ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்துவதற்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தின் எல்லைகள் உள்பட முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. அப்போது முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
எனினும், அத்தியாவசிய தேவையை தவிர்த்து ஏராளமானோர் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். மேலும் போலீஸ் கெடுபிடி அதிகமுள்ள பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் வலம் வருகின்றனர். இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஊரடங்கை மீறுவோரை தடுப்பதற்கு போலீசார் முழுவீச்சில் களம்இறங்கி உள்ளனர்.
அதன்படி நேற்று திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்பட மாவட்டம் முழுவதும் மதியம் 12 மணிக்கு மேல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் செல்வோரை மடக்கி போலீசார் விசாரித்தனர். அதில் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, இனிமேல் விதியை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தனர்.
டிரோன் கேமராவில் கண்காணிப்பு 
அதேநேரம் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் நிற்பதை பார்த்து சில மீட்டர் தூரத்திலேயே வாகன ஓட்டிகள் திரும்பி சென்றனர். அவ்வாறு வருபவர்களை கண்டறிய டிரோன் கேமராவை பறக்கவிட்டு போலீசார் கண்காணித்தனர். அதை கண்டதும் தேவையின்றி சுற்றிய சிலர் வாகனங்களில் மின்னல்வேகத்தில் தப்பி சென்றனர். அவர்களையும் பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அந்த வகையில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே 4 சாலைகள் சந்திப்பு பகுதியில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்து, போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல் மெயின்ரோட்டில் நேற்று மதியம் நகர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை மடக்கி போலீசார் விசாரித்தார். மேலும் தேவையின்றி சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்