ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.;
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது கொரோனா படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ள திரவ தொட்டிகளை அவர் பார்வையிட்டார். இதுபோல் என்ன வசதிகள் கூடுதலாக தேவைப்படுகிறது? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தியிடம் கேட்டார். தொடர்ந்து கொரோனா நோயாளிகள் மற்றும் மற்ற நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
அண்ணா சிலைக்கு மாலை
இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலை, குமரன் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் அவினாசி மற்றும் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
ரெம்டெசிவர்
முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு செய்யப்பட்டது. அங்கு வருகிற நோயாளிகளுக்கு தேவைப்படுகிற வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் கட்டிட வசதிகள் மற்றும் பரிசோதனை கூடங்கள் தேவையான அளவு இருக்கிறது. ஆக்சிஜன் பயன்பாடு மற்றும் தேவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் மற்றும் மற்ற நோயால் பாதிக்கப்படுகிறவர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மருத்துவத்துறை மூலம் எடுக்கப்படும். கொரோனாவால் பலியானவர்களின் உடல் விரைவாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவர் மருந்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரையும் இந்த பட்டியலில் இணைத்து, திருப்பூர் மாவட்டத்திலும் ரெம்டெசிவர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மூலம் கிடைக்கும் மருந்துகள் விரைவாக மக்களுக்கு சென்றடைய வழிவகை செய்யப்படும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
இறப்பு விகிதம்
திருப்பூர் மாவட்டத்தில் இறப்பு விகிதம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் இந்த இறப்பு விகிதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3400 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற கட்டமைப்பு வசதி உள்ளது. அதேபோல் இன்னும் கட்டமைப்பு வசதி அதிகரிக்க ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், வியாபாரிகள் சங்கம், மற்றும் தொழிலதிபர்கள் முன்வந்து தானாக உதவி செய்வதற்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------
-