விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன மேலாளர் குடும்பத்துக்கு ரூ.25½ லட்சம் இழப்பீடு; சென்னை கோர்ட்டு தீர்ப்பு
விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன மேலாளர் குடும்பத்துக்கு ரூ.25½ லட்சம் இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் தாஸ் (வயது 28). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு கோவையில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார்.சேலத்தை அடுத்த ஆத்தூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மற்றொரு கார் சுஜித் தாஸ் சென்ற கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தின் சார்பில் ரூ.2½ கோடி இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.சரோஜினி தேவி, சுஜித்தாஸ் குடும்பத்துக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.25 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.