ஊரடங்கு கட்டுப்பாட்டை கண்காணிக்க கூடுதலாக 15 சிறப்பு குழுக்கள் நியமனம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை கண்காணிக்க கூடுதலாக 15 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

Update: 2021-05-14 03:52 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மண்டலத்துக்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்கக்குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உள்பட 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மண்டல ஊரடங்கு அமலாக்கக்குழுவினருடன் முதன்மைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் அம்மா மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

ஊரடங்கு அமலாக்கக்குழுவினர் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து, அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.

கூடுதலாக 15 குழுக்கள்

அதன்படி, இதுவரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 390 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல ஊரடங்கு அமலாக்கக்குழுவின் மூலம் மட்டும் ரூ.21 லட்சத்து 21 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, மண்டலத்திற்கு ஒரு ஊரடங்கு அமலாக்கக்குழு என 15 மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மேலும் 15 ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் என கண்காணிப்பு குழுக்களை 2 மடங்காக அதிகரித்து இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் த.செந்தில்குமார், டாக்டர் என்.கண்ணன், மாநகராட்சி இணை கமிஷனர் சங்கர்லால் குமாவத், துணை கமிஷனர்கள் ஜெ.மேகநாத ரெட்டி, டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

300 டாக்டர்கள்

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று காலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வீட்டுத்தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கவும் புதிதாக 300 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.

மேலும் செய்திகள்