நாயை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலி

குன்னூரில் நாயை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2021-05-14 01:15 GMT
குன்னூர்,

குன்னூரில் நாயை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சிறுத்தைப்புலி நடமாட்டம்

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கரோலினா, அட்டடி, வண்டிசோலை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. இதை தடுக்கக்கோரி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

குன்னூர் அருகே ஆரஞ்சு குரோவ் பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விடுதி இருக்கிறது. இந்த விடுதிக்கு அருகில் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதி காணப்படுகிறது.

நாய் உடல்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் அந்த விடுதியின் முன்பக்க கதவில் சிதைந்த நிலையில் நாய் உடல் தொங்கி கொண்டு இருந்தது. இதை கண்ட காவலாளி, குன்னூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். 

பிடிக்க நடவடிக்கை

பின்னர் வனத்துறையினர் கூறும்போது, கன்டொன்மெண்ட் வனப்பகுதிக்கும், சிம்ஸ் பூங்கா வனப்பகுதிக்கும் இடைபட்ட இடத்தில் நாயை கவ்விக்கொண்டு சிறுத்தைப்புலி சென்று உள்ளது. பின்னர் விடுதியின் கதவை தாண்டி உள்ளது. அப்போது நாயின் உடல் கதவில் உள்ள கம்பியில் சிக்கிக்கொண்டது. 

இதனால் நாயின் உடலை விட்டு சிறுத்தைப்புலி மட்டும் தப்பி சென்றுவிட்டது. சிறுத்தைப்புலியை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்