ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-05-14 01:10 GMT
கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொற்று பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிகளவில் பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில்  500-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளது. இதில் பெரும்பான்மையாக கூடலூர் பகுதியில் 280 கிராமங்கள் உள்ளது. கடந்த காலங்களில் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். தற்போது ஆதிவாசி மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பந்தலூர் தாலுகா சோலாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கேரள எல்லையில் இருப்பதால் ஆதிவாசி மக்கள் அந்த மாநிலத்திற்கு சென்று வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் பிற கிராமப்புறங்களிலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் மத்தியில் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

தடுப்பூசி போடும் பணி

இதைத்தொடர்ந்து கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி குறித்து ஆதிவாசி மக்களிடம் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது. இதனால் வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து ஆதிவாசி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு கிராமங்களில் ஆதிவாசி மக்கள் பலர் விருப்பமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர்.

கூடலூர், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அடர்ந்த வனத்தின் நடுவில் உள்ள செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் டாக்டர் லோகேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.  

ஆய்வு

இந்த பணியை ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் தினேஷ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆர்.டி.ஓ. ராஜ்குமார் கூறும்போது, தடுப்பூசி குறித்து ஆதிவாசி மக்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. 

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் சூழ்நிலையில் கிராமங்கள்தோறும் முகாம் நடத்தி நேரடியாக மருத்துவ குழுவினர் வந்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஆதிவாசி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்