சேலம் ஜவகர் மில் திடலில் செயல்படும் தற்காலிக உழவர்சந்தைக்கு விவசாயிகள் எதிர்ப்பு புதிய பஸ் நிலையத்துக்கு மாற்ற கோரிக்கை
சேலம் ஜவகர் மில் திடலில் செயல்படும் தற்காலிக உழவர்சந்தைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் ஜவகர் மில் திடலில் செயல்படும் தற்காலிக உழவர்சந்தைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காலிக உழவர்சந்தை
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகவும், பொது மக்களின் நலன் கருதியும் தினசரி காய்கறி சந்தைகள் விசாலமான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சூரமங்கலம் உழவர் சந்தை 3 ரோடு அருகே ஜவகர் மில் தேடலுக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.
சூரமங்கலம் உழவர் சந்தையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆனால் இடமாற்றம் செய்யப்பட்ட ஜவகர் மில் திடலில் 40 பேர் மட்டுமே கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அங்கு காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு போதுமான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
இதுதவிர, பொதுமக்களும் ஜவகர் திடலுக்கு வந்து காய்கறிகள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அங்கு தினமும் குறைந்த அளவே பொதுமக்கள் காய்கறி வாங்க வந்து செல்கின்றனர். எனவே ஜவகர் மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தும், வேறு இடத்திற்கு சந்தையை மாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சூரமங்கலம் உழவர் சந்தையில் 200 கடைகள் உள்ளன. அங்கு கூட்டம் அதிகமாக வருவதாக கூறி தற்காலிகமாக ஜவகர் மில் திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதுமான வசதிகள் இல்லை. பொதுமக்களும் அதிகளவு வருவதில்லை. இதனால் விற்பனைக்கு கொண்டு வந்த காய்கறிகள் விற்காமல் போவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
புதிய பஸ் நிலையம்
எனவே மீண்டும் சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அங்கு தினமும் 50 விவசாயிகள் வீதம் சுழற்சி முறையில் அனுமதிக்கலாம். அல்லது புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம், என்றனர்.