சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க கோரிக்கை

உடையார்பாளையத்தில் சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-13 19:57 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இருந்து முனியத்திரையான்பட்டி வழியாக கழுமங்கலம், நகல்குழி, வீராக்கன், உஞ்சினி, சிறுகடம்பூர், செந்துறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் தினமும் லாரி, மினி லாரி, பஸ் என ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். மேலும் இப்பகுதி பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கான மூலப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில், சாலையில் உள்ள குண்டு, குழிகளில் மழைநீர் சூழ்ந்து பள்ளம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனங்கள் இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் குண்டும், குழியுமாக உள்ள சாலை வழியாக செல்லும்போது சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்