ஊரடங்கால் சாலையோர கடைகளில் அழுகி வீணாகும் தர்பூசணி, கிர்ணி பழங்கள் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் கவலை
முழு ஊரடங்கு காரணமாக சாலையோர கடைகளில் தர்பூசணி மற்றும் கிர்ணிபழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. மேலும் விற்பனையும் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:-
முழு ஊரடங்கு காரணமாக சாலையோர கடைகளில் தர்பூசணி மற்றும் கிர்ணிபழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. மேலும் விற்பனையும் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது தினமும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 20-ந்தேதி தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் கடந்த 6-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டது. மேலும் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கில் காய்கறி, மருந்து. இறைச்சிக்கடைகள். பால் பூத் மற்றும் உணவகங்கள். தேனீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பால் பூத். மருந்துக் கடைகளைத் தவிர இதர கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சாலையோர பழக்கடைகள்
ஊரடங்கு காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வழியே சென்று வருகிறார்கள். இந்த ஊரடங்கு காரணமாக சாலையோர பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கினால் சாலையோர தர்பூசணி மற்றும் கிர்ணி பழ வியாபாரிகள் விற்பனை இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பழங்கள் குவிந்து கிடப்பதால் ஏராளமான பழங்கள் அழுகி வீணாகி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்திற்கு லால்குடி. கரம்பயம். புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை.ஆதனக்கோட்டை பகுதிகளில் இருந்து கிர்ணி பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் பழங்களின் விலை வெகுவாக சரிவடைந்துள்ளது.
பெரும் நஷ்டம்
தஞ்சை மாவட்டத்திற்கு விற்பனைக்கு வந்த பழங்களும் விற்பனையாகாமல் ஆங்காங்கே சாலையோர வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர். தினமும் கிலோ கணக்கில் பழங்கள் அழகி அவற்றை குப்பையில் கொட்டி வருகிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சையில் சாலையோரம் தர்பூசணி மற்றும் கிர்ணி பழம் விற்பனை செய்து வரும் வியாபாரி பரமசிவம் கூறியதாவது:-
தர்பூசணி பழம் டன் ரூ.10 ஆயிரத்துக்கும். கிர்ணி பழம் டன் ரூ.12 ஆயிரத்துக்கும் வாங்கினேன். ஆனால் முழு ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பழங்கள் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் பழங்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கள் ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் தினமும் கிலோ கணக்கில் அழுகி வீணாகிறது. இதனால் தினமும் பழத்தை தரம் பிரித்து எடுத்து வருகிறோம். கிர்ணி பழம் விற்பனை ஆகாததால் ஒரு டன்னும் அழுகி வீணாகி விட்டது. தர்பூசணியும் அழுகி விட்டது. நேற்று ஒரு கிலோ கூட தர்பூசணி பழம் விற்பனையாகவில்லை. இதனால் நஷ்டம் அடைந்துள்ளோம். கடந்த ஆண்டும் இதே போல தர்ப்பூசணி சீசன் காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் பழங்கள் விலை குறைத்து விற்பனை செய்தும், அழுகியும் வீணானது. கடந்த ஆண்டும் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.