நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது.;
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று பகலில் நெல்லையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. இரவு 10 மணி அளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. அப்போது காற்றும் பலமாக வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை தொடர்ந்து பெய்தது. நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், டவுன் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மாஞ்சோலை
இதே போல் நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மாலை லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்தது.
இதே போல் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி, தளபதி சமுத்திரம், அம்பை, முக்கூடல், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் ஒருசில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.