நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு

மாடல் அழகியை தாக்கியதாக நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு

Update: 2021-05-13 18:27 GMT
பெங்களூரு:


கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர், போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்குப்பதிவாகி உள்ளது.  அதாவது கடந்த 2019-ம் ஆண்டில் லாவல்லி ரோட்டில் உள்ள கிளப்பில் நடிகை சஞ்சனா, மாடல் அழகி வந்தனா மற்றும் அவர்களது நண்பர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் வந்தனா மற்றும் அவரது நண்பரை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதுடன், தாக்கவும் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் சஞ்சனா மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக வந்தனா சார்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு நடிகை சஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கப்பன்பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. 

அதன்பேரில், கப்பன்பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்