சலவன்பேட்டையில் உடல்களை எரிக்க 2-வது நாளாக பொதுமக்கள் எதிர்ப்பு

சலவன்பேட்டையில் உடல்களை எரிக்க 2-வது நாளாக பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2021-05-13 18:18 GMT
வேலூர்

வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு தகனமேடை கடந்த 10-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் நேற்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் இப்பகுதியை சுற்றி உள்ளவர்கள் இறந்தால் இங்கு கொண்டு வந்து எரிக்கலாம். ஆனால் காட்பாடி போன்ற பிற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களும் இங்கு கொண்டு வந்து எரிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றனர். 

அதற்கு அதிகாரிகள், கொரோனா காலக்கட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். கொரோனா தொற்று மறைந்தவுடன் உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்