பரமத்திவேலூரில் உழவர் சந்தை, வாழைத்தார் ஏல சந்தை இடமாற்றம்

பரமத்திவேலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தை, வாழைத்தார் ஏல சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-05-13 18:05 GMT
பரமத்திவேலூர், மே.14-
பரமத்திவேலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தை, வாழைத்தார் ஏல சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.
உழவர் சந்தை இடமாற்றம்
பரமத்திவேலூர் பேரூராட்சியில் பேட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பேட்டையில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையை இடமாற்றம் செய்து பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர். 
அதன்படி உழவர் சந்தை பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு சாலையோரம், கடைகளை வைத்து விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனை செய்தனர். இதேபோல், பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த வாழைத்தார் ஏல சந்தையும் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த ஏல சந்தை பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.
அறிவுறுத்தல்
உழவர் சந்தை, வாழைத்தார் ஏல சந்தைக்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வரவேண்டும் என்று பேரூராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர். மேலும் முககவசம் அணியாமல் வந்த சிலரை திருப்பி அனுப்பினர்.
பரமத்திவேலூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க உழவர் சந்தையும், வாழைத்தார் ஏல சந்தையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வியாபாரிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்