குளித்தலை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் சாவு
குளித்தலை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
குளித்தலை
லாரிகள் மோதல்
சென்னையில் இருந்து கரூர் மாவட்டம், குளித்தலை வழியாக பொள்ளாச்சி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதேபோல கரூர் பகுதியில் இருந்து கிரசர் மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குளித்தலை வழியாக சென்றுகொண்டிருந்தது. திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள மணத்தடை பகுதியில் இந்த இரண்டு லாரிகளும் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் 2 லாரிகளும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
2 பேர் படுகாயம்
இந்த விபத்தில் படுகாயமடைந்த கன்டெய்னர் லாரியில் வந்த சென்னை கோயமேடு பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 34), கிரசர் மண் ஏற்றி வந்த லாரியின் டிரைவரான கரூர் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (40) ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்டமாக விபத்து நடந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிட்டனர்.
டிரைவர் சாவு
பின்னர் இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அதன் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜை (30) மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் கிரேன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த முருகராஜ் மீட்கப்பட்டார். இருப்பினும் அவர் இறந்துவிட்டார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.