அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணன்-தம்பி மீது தாக்குதல்
மயிலாடுதுறை அருகே அருண்மொழிதேவன் ஊராட்சி மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மகன்கள் தியாகராஜன் (வயது 33), அருள்செல்வன் (30). இந்தநிலையில் அருள்செல்வன் தனது தந்தைக்கு கடன் பாக்கி தரவேண்டிய குருமூர்த்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது குருமூர்த்திக்கும், அருள்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த குருமூர்த்தியின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சின்னதுரை, ஜெகநாதன் மகன் ரவி, கலியமூர்த்தி மகன் செல்வகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு பைப்பால் அருள்செல்வனை தாக்கினர். அப்போது தடுக்க வந்த தியாகராஜனையும் அவர்கள் இரும்பு பைப்பால் தாக்கினர்.
3 பேர் கைது
இதில் படுகாயமடைந்த அருள்செல்வன், தியாகராஜன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதுதொடர்பாக சின்னதுரை (24), ரவி (55), செல்வகுமார் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.