கொரோனா நோயாளிகளுக்கான புதிய வார்டில் ஆய்வு
திண்டிவனத்தில் கொரோனா நோயாளிகளுக்கான புதிய வார்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொரொனோ நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டுகளை சிறுபான்மையினர் நலன் மறறும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரியிடம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர், திண்டிவனம்-மரக்காணம் சாலையில் இயங்கி வரும் ஐ மெட் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொரோனா நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டுகளை பார்வையிட்டு, டாக்டர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
படுக்கைகளுக்கு ஏற்பாடு
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில்,
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் உள்ளன. மேலும் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் வசதிகள், உபகரணங்கள் குறித்து முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
செஞ்சி ரங்கபூபதி கல்லூரியில் கொரொனா நோயாளிகளுக்காக 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அங்கு கூடுதல் படுக்கைகள் போடப்பட்டு விரிவுப்படுத்தப்படும் என்றார்.
பேட்டியின்போது, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சீதாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், திண்டிவனம் நகர தி.மு.க. செயலாளர் கபிலன், டாக்டர் சேகர், வக்கீல் ஆதித்தன், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், ஆசிரியர் கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், வக்கீல்கள் விஜயன், சேகர், பாபு, பிர்லா செல்வம், புலி ராஜாராம், சீனிராஜ், ஐ மெட் மருத்துவமனை டாக்டர்கள் வினோபாரதி, முகமது பைசல், சுரேஷ்குமார், மருத்துவமனை அலுவலர்கள் சுகானந்தம், பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.