உண்டியல் பணத்தை வழங்கிய மாணவிக்கு மடிக்கணினி

முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக உண்டியல் பணத்தை வழங்கிய மாணவிக்கு கலெக்டர், லட்சுமணன் எம்.எல்.ஏ. மடிக்கணினி வழங்கினர்

Update: 2021-05-13 17:31 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தை சேர்ந்த கதனேசன், தமிழ்செல்வி தம்பதியரின் மகள் சிந்துஜா. 5-ம் வகுப்பு படித்து வரும் இவர், உயர்கல்வியின் தேவைக்காக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் பணம் சேமித்து வந்தார். இந்த சூழலில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்பு குறித்தும், தமிழக முதல்-அமைச்சருக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருறார்கள். இது பற்றி அறிந்த மாணவி சிந்துஜா, தான் ஆசையாக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1,500-ஐ முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது தந்தையின் உதவியுடன் வரைவோலையாக எடுத்து அனுப்பி வைத்தார். இதனை செய்தித்தாளில் படித்த தலைமை செயலாளர் இறையன்பு, மாணவி சிந்துஜாவுக்கும், அவரது பெற்றோருக்கும் பாராட்டு தெரிவித்து அதற்கான பாராட்டு சான்றிதழை அனுப்பினார். அதனை நேற்று மாலை கலெக்டர் ஆ.அண்ணாதுரை, அம்மாணவியிடம் வழங்கினார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன், மாணவி சிந்துஜாவுக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டினார். அப்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்