கை கூப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று கை கூப்பி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினா்.;
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதிலும் பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை கடைகள், பலசரக்கு கடைகள் இயங்கி வருவதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் விழுப்புரம் நகர கடைவீதிகளுக்கு வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் விழுப்புரம் நகருக்கு வருகின்றனர். அவர்களில் சிலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கச்செல்கிறோம் என்ற பெயரில் தேவையின்றி நகருக்குள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை தடுக்க நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு கோலியனூர் கூட்டுசாலை பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், ராமலிங்கம் ஆகியோர் நிறுத்தி அவர்களிடம் இரு கைகளையும் கூப்பி கும்பிட்டவாறு தேவையின்றி வீட்டில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் உணர்வுப்பூர்வமான பணியை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர்.