கடலூரில் பயங்கரம் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி 14 பேர் படுகாயம்

கடலூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-05-13 17:17 GMT
கடலூர் முதுநகர், 

இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கடலூர் முதுநகர் அருகே சிப்காட் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் குடிகாடு கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா காரணமாக 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 

பாய்லர் வெடித்தது

இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணியிலும், சிலர் தொழிற்சாலை பராமரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது காலை 7.30 மணி அளவில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் (வேதிவினை புரியும் கொள்கலனான ரியாக்டர்) அதிக அழுத்தம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 

இதனால் அதில் இருந்த எத்திலின் டைகுளோரைடு மற்றும் ஐசோபுரோபைல் ஆல்ஹகால் ஆகிய ரசாயன வாயு வெண் புகையுடன் வெளியேறியது. அப்போது அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து இறந்தார்.

தொழிலாளர்கள் பலி 

பாய்லர் வெடித்து சிதறிய அடுத்த சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீதும் தீப்பற்றியது. வலியால் துடித்த அவர்கள், அங்கும் இங்குமாக ஓடினார்கள். இதில் 3 தொழிலாளர்கள் தீயில் கருகி் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 14 பேர் தீக்காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் சிப்காட், புதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. 

அதன்பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது விவரம் வருமாறு:-
1. கடலூர் முதுநகர் காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெரு செந்தில்குமார் மனைவி சவிதா (வயது 35).
2.  கடலூர் பழைய வண்டிப்பாளையம் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்(42).
3. கடலூர் முதுநகர் அருகே உள்ள செம்மங்குப்பம் கருணாகரன் மகன் கணபதி (25)
4. பரங்கிப்பேட்டை விஜயகுமார் மகன் விஸ்வேஷ்ராஜ் (25). 

14 பேருக்கு சிகிச்சை

இது பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) லாமேக், கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
விபத்தில் தீக்காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களின் விவரம் வருமாறு:-

தேனி மாவட்டம், சின்னமனூர் முத்து முருகன் மகன் ஹரிஹரன் (23), கடலூர் சுப்பிரமணியபுரம் மாயவேல் மகன் ராஜி (24), குடிகாடு ராதாகிருஷ்ணன் மகன் கண்மணி (43), ஈச்சங்காடு சக்கரவர்த்தி மனைவி தேவிபாலா (32), காரைக்காடு குமார் மனைவி செல்வி (45), காரைக்காடு முருகானந்தம் மனைவி குணசுந்தரி (45), பாதிரிக்குப்பம் தமிழ்மணி மகன் வினோத்குமார் (25), புவனகிரி பூராசாமி மகன் சதீஷ் குமார் (27), கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவை சேர்ந்த பழனியப்பன் மகன் ராம்குமார் (26), நெய்வேலி ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (31), பத்திரக்கோட்டை சேசாசலம் மகன் ஜவகர்லால் (27), தூத்துக்குடி ஏரல் சேகர் மகன் சபரி (22), கடலூர் அன்னவல்லி லட்சுமணன் மகன் சத்தியமூர்த்தி (30), குடிகாடு அசோக்குமார் மனைவி கவிதா (33).

சாலை மறியல்

மேலும் இறந்த 4 பேர் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதற்கிடையில் இறந்த 4 பேர் குடும்பத்தினரும் தகவல் அறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இறந்த 4 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல் நாகவேந்தன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் தாசில்தார் பலராமன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரி எதிரே பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.


====
(பாக்ஸ்)மூட்டை, முடிச்சுகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் 

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் அதிகளவு வெண்புகை வெளியேறியது. வானத்தை நோக்கி பல மீட்டர் உயரத்துக்கு வெண் புகை வெளியேறி சென்றதை பார்க்க முடிந்தது. இதை பார்த்த குடிகாடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

சிலருக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், தங்களது வீடுகளில் இருந்த முக்கிய பொருட்களை மட்டும் மூட்டைகளில் போட்டு கட்டினர். பின்னர் மூட்டை, முடிச்சுகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறினர்.
 இது பற்றி அறிந்த சிலர், பாய்லர் வெடிப்பால் பாதிப்பு எதுவும் வராது என்றனர். அதன்பிறகே நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள், அனைவரும் ஒன்று திரண்டு தொழிற்சாலை முன்பு கூடினர். 

மேலும் செய்திகள்