வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பாகூர் ஏரி நீர்மட்டம் வேகமாக குறைகிறது தூர்வார விவசாயிகள் கோரிக்கை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பாகூர் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஏரியை தூர்வார விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகூர்,
புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. இது விவசாய பாசனத்துக்கு பயன்படுவதுடன் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. 3.6 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரியின் சுற்றளவு 8.30 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஏரியில் 198 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.
இதன் மூலம் பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 24 கிராமங்களில் உள்ள சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு பருவமழையின்போது தென்பெண்ணையாற்றில் இருந்து சொர்ணாவூர் அணைக்கட்டு வழியாக பங்காரு வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் உள்ளூர் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 170 செ.மீ. மழை பெய்தது. இதனால் பாகூர் ஏரி குறுகிய காலத்தில் 3 முறை நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் ஏரி நீர் ஆவியாகி, நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் அங்குள்ள மரங்களில் கூடுகட்டி வசித்த பறவைகள் இடம்பெயர்ந்து விட்டது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வண்டல்மண் சேர்ந்துள்ளதாகவும், இதனால் நீர் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தூர்வாரிய மண்ணை விவசாய நிலத்தை மேம் படுத்த அரசு அனுமதி அளிக்கவேண்டும், கடந்த காலங்களில் இருந்ததுபோல் ஏரி சங்கத்தினர் மூலம் ஏரியை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.