கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 7 பேர் பலி
கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 245 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்த ஓபுளாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், திண்டுக்கல்லை சேர்ந்த 66 வயது முதியவர், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், கே.டி.பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், பழனியை சேர்ந்த 58 வயது ஆண், ராஜக்காபட்டியை சேர்ந்த 53 வயது பெண், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த 57 வயது பெண் ஆகிய 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.
இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 162 பெண்கள் உள்பட மொத்தம் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 646 ஆனது. அதேநேரம் 292 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 182 பேர் சிகிச்சையில் உள்ளனர்.