712 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

Update: 2021-05-13 16:13 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
712 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500க்கு குறைவாக இருந்தது. ஆனால் பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 886ஆக உயர்ந்துள்ளது.
ஒருவர் பலி
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 265 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 867ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதித்த 4 ஆயிரத்து 753 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூரை சேர்ந்த 72 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 266ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ரெயில்வே போலீசார் 10 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் திருப்பூர் ரெயில் நிலைய போலீசார் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை உள்ளனர். மேலும் 6 பேருக்கு அறிகுறி தென்படுவதால் அவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் 21 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், விடுப்பில் உள்ளவர்களால் குறைவான போலீசாரைக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். 

ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனோ பரிசோதனைக்காக மாதிரி எடுத்த ஊழியர்கள் 2 பேர் மற்றும் செவிலியர் உள்பட 3 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இதனால் குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. உடனடியாக குன்னத்தூர் பேரூராட்சி பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படும் என மருத்துவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்