முன்பட்ட குறுவை சாகுபடி பணி தொடங்கியது

கொரடாச்சேரி ஒன்றியத்தில் முன்பட்ட குறுைவ சாகுபடி பணி தொடங்கியது. இதற்கு உரம், மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2021-05-13 16:11 GMT
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஒன்றியத்தில் முன்பட்ட குறுைவ சாகுபடி பணி தொடங்கியது. இதற்கு உரம், மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். 
முன்பட்ட குறுவை சாகுபடி பணி
காவிரி டெல்டா பகுதிகளில் ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படுவதை முன்னிட்டு குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவர். ஆழ்குழாய் நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் சற்று முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம். இதனை முன்பட்ட குறுவை சாகுபடி பணி என விவசாயிகள் அழைப்பர். அதன்படி கொரடாச்சேரி ஒன்றியத்தில் இலவன்கார்குடி, பெரும்புகழூர், காப்பனாமங்கலம், எண்கண், பெருமாளகரம் உள்ளிட்ட பகுதிகளில்  200 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தொடங்கின. 
நாற்று பறித்தல் 
நாற்றங்கால்களில் விடப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பறித்து நடவு பணிகளை மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஆழ்குழாய் பாசனத்தை வைத்து பணிகளை தொடங்கினாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் வழக்கம் போல் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு மேட்டூர் அணை திறக்கும் பட்சத்தில் அந்த நீரை  கொண்டு தொடர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.  நாற்று பறித்தல், நடவு நடுவதற்கு வயல்களை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 
தடையின்றி மும்முனை மின்சாரம்
இந்த குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணை நீர் கிடைக்கும் வரையிலும் ஆழ்குழாய் பாசனம் மூலம் தண்ணீர் பெறுவதற்கு வாய்ப்பாக மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும். 
இதேபோல் சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிமருந்து, நுண்ணுயிர் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்