டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை

வேளாங்கண்ணி அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு விட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மூன்று தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2021-05-13 21:21 IST
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு விட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மூன்று தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
டாஸ்மாக் கடை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) உள்ளது. இந்த கடையில் திருவாரூர் மாவட்டம் கோமல் பிச்சைபாக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசன்(வயது 48) மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். 
கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த மாதவன்(45), வேதாரண்யம் அன்னாபேட்டை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம்(43), திருக்குவளை வடுகூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் மகன் வீரமணி ஆகியோர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
பூட்டிக்கிடந்தது
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 10-ந் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளது. அதன்படி பாலக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையும் பூட்டப்பட்டு இருந்தது. 
கீழையூர் மேல ஈசனூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(59), முப்பத்தி கோட்டகம் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி (45) ஆகிய இருவரும் இரவு காவல் பணியாளராக இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிறிய கீற்று கொட்டகையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
ரூ.73 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அந்த மதுபான கடைக்கு 5 பேருக்கு மேல் வந்துள்ளனர். அவர்களில் சிலர் மதுக்கடையில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த இருவரின் வாய், கைகள் மற்றும் கால்களை கட்டி விட்டு கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். 
அவர்களில் சிலர் டாஸ்மாக் கடையின் ஷட்டரில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.73 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மர்ம நபர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இரவு காவலர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே கட்டப்பட்டு இருந்த கட்டை அவிழ்த்து விட்டு பின்னர் நடந்த சம்பவத்தை டாஸ்மாக் கடை மேலாளருக்கு  தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையின் மேலாளர், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வேளாங்கண்ணி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் கொள்ளை நடந்த மதுக்கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர்.  நாகை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கடை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 தனிப்படைகள் அமைப்பு

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ஆனந்த்குமார் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்