கொடைக்கானல் பகுதியில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வபோது மழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்தநிலையில் நேற்று காலை முதலே மேகமூட்டங்கள் வானில் சூழ்ந்தது. பின்னர் பிற்பகல் 3 மணி முதல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோலாஅருவி போன்றவற்றில் வெள்ளம் கொட்டியது. மழையை தொடர்ந்து கருமையான மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் கொடைக்கானலில் பகல் நேரமே இரவு போல் காணப்பட்டது. மழையினை தொடர்ந்து குளிர் நிலவியது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.