கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்கு 6 டாக்டர்கள் நியமனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்கு கட்டுப்பாட்டு அறையில் 6 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
இதற்காக மாவட்டம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
இதில் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் உயர்வதால், கட்டுப்பாட்டு அறைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் ஒரு தாசில்தார், 6 டாக்டர்கள், 4 செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர், 2 போலீசார் உள்பட 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அந்த பரிசோதனை முடிவுகள் கட்டுப்பாட்டு அறைக்கு முதலில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கொரோனா பாதித்த நபர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவர்களை சிகிச்சைக்கு வரவழைப்பது, நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை டாக்டர்கள் மேற்கொள்கின்றனர்.
அதேபோல் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, நோய் தடுப்பு முறைகளை டாக்டர்கள் தெரிவிப்பார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.