தேர்தல் பணியால் வந்த வினை ஆசிரியர் குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு பலி
பண்டர்ப்பூர் இடைத்தேர்தலில் பணி செய்த ஆசிரியர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா நோயால் பலியாகினர்.
மும்பை,
சோலாப்பூர் மாவட்டம், சன்கோலா தாலுகாவில் உள்ள கேர்தி கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத் மானே(வயது57). இவர் சமீபத்தில் நடந்த முடிந்த பண்டர்பூர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் பணியில் இருந்து திரும்பிய சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் இந்த நோய் பாதிப்பு பரவியது. அவரது மனைவி, மகன், சகோதரர், பெற்றோர் மற்றும் அத்தை ஆகியோர் அவர் மூலமாக நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.
இதை தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவரின் சகோதரர் கடந்த 4-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அடுத்த நாளே அவரது அத்தையும் இறந்தார். கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் அவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் மரணம் அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது. மேலும் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.