மா சாகுபடியில் மகசூல் இழப்பு

உடுமலை பகுதியில் மாறுபட்ட பருவநிலைகளால் மா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-13 13:35 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் மாறுபட்ட பருவநிலைகளால் மா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பூக்கும் போது மழை
உடுமலையை அடுத்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, வாளவாடி, லிங்கமாவூர், சின்னகுமாரபாளையம், குமரலிங்கம், திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு மல்கோவா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த், நடுச்சாலை, நீலா உள்ளிட்ட பல்வேறு ரக மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நடப்பு ஆண்டில் மாறுபட்ட பருவநிலைகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பனி பொழிகிறது. பனி பெய்ய வேண்டிய நேரத்தில் மழை பொழிகிறது. இவ்வாறு மேற்பட்ட பருவநிலை காணப்படுவதால் எந்தெந்த பருவத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்வது என்பதைத் திட்டமிடுவதிலேயே விவசாயிகள் திணறும் நிலை உள்ளது. ஏனென்றால் பெரும்பாலான பயிர்கள் பூக்கும் தருணத்தில் மழைப் பொழிவு ஏற்பட்டால் பூக்கள் உதிர்ந்து விடும். அந்தவகையில் நடப்பு ஆண்டில் பருவம் தவறிப் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிவாரணம்
உடுமலை பகுதியை பொறுத்தவரை ஆண்டுக்கு இரண்டு முறை மா அறுவடை மேற்கொள்ளுமளவுக்கு காய்ப்பு இருக்கும். ஆனால் சமீப காலங்களாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை மேற்கொள்ள முடிகிறது. அதிலும் மகசூல் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதுதவிர மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சாகுபடி மேற்கொள்ளப்படுவதால் காட்டுப் பன்றிகள், யானைகள் போன்ற வன விலங்குகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாவுப்பூச்சிகள் உள்ளிட்ட பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க தொடர் பராமரிப்பு, கவாத்து உள்ளிட்ட பணிகளுக்கான செலவினங்கள் என ஆண்டு முழுவதும் செலவு செய்து விட்டு வருமானத்துக்காக காத்திருக்கும் நிலையில் இருக்கிறோம்.
தற்போதைய நிலையில் சராசரி மகசூலை விட பாதிக்கும் குறைவாகவே மகசூல் உள்ளது. கடந்த ஆண்டிலும் இதே பிரச்சினையை சந்தித்தோம். ஆனால் காப்பீடு செய்த விவசாயிகளுக்குக் கூட இழப்பீடு கிடைக்கவில்லை. நடப்பு ஆண்டிலும் அதே பிரச்சினையை சந்திக்கிறோம். தற்போதைய கொரோனா ஊரடங்கால் மாம்பழங்களை வெளியூர்களுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போதிய விலையும் கிடைக்காத நிலை உள்ளது. எனவே அரசு மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்