வீதியில் விளையாட அனுமதிக்காதீர்
தற்போதைய இக்கட்டான சூழலில் குழந்தைகளை வீதிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடிப்பட்டி
தற்போதைய இக்கட்டான சூழலில் குழந்தைகளை வீதிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழு ஊரடங்கு
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
கொடிய வைரசான கொரோனாவின் முதல் அலையை விட 2வது அலை இந்தியா முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளையும் தாண்டி மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லாததால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக உள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதியம் 12 மணி வரை அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி போன்ற கடைகளைத் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல வெளியூர்களில் தங்கி பணியாற்றுபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய அரசுத்துறைகள், வங்கிகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குக்கான அறிகுறிகளே தெரியாத அளவுக்கு பகல் 12 மணி வரை சாலைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அவர்களைத் தடுக்க முடியாமல் போலீசாரும் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதேநிலை நீடித்தால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மேலும் சிக்கல் உருவாகக் கூடும்.
வீதிகளில் விளையாட்டு
எனவே பொதுமக்கள் மிகவும் அத்தியாவசியம் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்காக செல்ல வேண்டியதிருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு ஒரே நேரத்தில் முடித்து விட்டு வீடு திரும்புங்கள். அதிலும் ஒருசிலர் இந்த இக்கட்டான காலகட்டத்திலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே செல்வதைப் பார்க்க முடிகிறது.
மேலும் கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் பல சிறுவர்கள் கும்பலாக வீதிகளில் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. தற்போதைய கொரோனா 2வது அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும், 3வது அலை உருவானால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிப்பது எந்தவிதமான தைரியம் என்பது தெரியவில்லை. கொரோனாவைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்னும் நம்பிக்கையூட்டும் வாசகங்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் விலகி நின்று வெற்றி பெறுங்கள் என்பதற்காகத்தான் சொல்லப்படுகிறது. சில நாட்கள் சிரமங்களை அனுபவித்தால் பல நாட்கள் சந்தோசமாக வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் வீடுகளுக்குள் இருங்கள். கண்டிப்பாக குழந்தைகளை அக்கம்பக்கம் வீடுகளுக் கூட விளையாடுவதற்கு அனுப்ப வேண்டாம். நீங்களே குழந்தைகளுடன் விளையாடுங்கள். இதன்மூலம் உறவு வலுப்பெறுவதுடன் பாதுகாப்பும் கிடைக்கும்.
இவ்வாறு என்று அவர்கள் கூறினர்.