ஆம்புலன்சு அலறல் சத்தம்
திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் ஆம்புலன்சு அலறல் சத்தம்
அனுப்பர்பாளையம்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. திருப்பூரிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் போதிய படுக்கை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. நுரையீரலில் அதிக சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க தேவையான ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எங்கு சிகிச்சை பெறுவது என்று மக்கள் திண்டாடி வருகின்றனர்.
மேலும் எப்படியாவது உயிரை காப்பாற்றினால் போதும் என்ற எண்ணத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து, அரசு ஆஸ்பத்திரிக்கும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 108 ஆம்புலன்சு மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதேபோல் நோய்தொற்று தீவிரமாக உள்ளவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதேபோல் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் ஆரம்ப கட்டம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் 108 மற்றும் தனியார் ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். பலர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் கோவை நகருக்கும் செல்கின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் ஆம்புலன்சு அலறல் சத்தம் கேட்கிறது. கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு ஒருபுறமும், ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு மற்றொருபுறம் ஏற்பட்டுள்ளது.
----