ஆரணி, போளூர், வந்தவாசியில் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு ‘சீல்’

ஆரணி, போளூர் மற்றும் வந்தவாசி பகுதிகளில் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-05-13 12:36 GMT
ஆரணி-

கடைகளுக்கு ‘சீல்’

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நேர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, பூக்கடைகள், டீக்கடைகள், பேக்கரி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளை மட்டும் பகல் 12 மணி வரை திறந்து கொள்ள அனுமதித்துள்ளது. 

முழு ஊரடங்கின் 4-வது நாளான நேற்று ஆரணி நகரில் பகல் 12 மணிக்கு பிறகு தேவையின்றி சாலைகளில் சுற்றி தி்ரிந்தவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். ஜவுளி கடைகள், பூட்டு சாவி ரிப்பேர் கடை, செல்போன் சர்வீஸ் சென்டர் உள்ளிட்ட 5 கடைகள் பகல் 12 மணிக்கு பிறகும் திறந்து இருந்தன. அந்த 5 கடைகளுக்கு ஆரணி தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் வேல்மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார் ஆகியோர் சீல் வைத்தனர்.

போளூர்

போளூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்க ப்படுகிறதா? என்று தாசில்தார் சாப்ஜான் தலைமையில் குழுவினர் ஆய்வு நேற்று செய்தனர்.
அப்போது போளூரில் வெல்டிங், எண்ணெய், டிராக்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் மற்றும் போளூரை அடுத்த வசூர் கிராமத்தில் வெல்டிங் கடை ஆகியன அரசு விதிகளை மீறி திறந்து இருந்தன. 
இதையடுத்து அவர்களை எச்சரித்து அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

வந்தவாசி

வந்தவாசி பஜார் வீதியில் அரசு அறிவித்த முழு ஊரடங்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட கடைகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதைத் தவிர அனுமதிக்கப்படாத சில கடைகளும் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் 10 கடைகளுக்கு எச்சரிக்கையும், ரூ.10 ஆயிரத்து 200 அபராதமும் நகராட்சி நிர்வாகம் விதித்தது. 

இந்த நிலையில் ஏற்கனவே விடுத்த எச்சரிக்கையை மீறி காந்தி ரோட்டில் ஒரு இரும்புக் கடைக்கு சொந்தமான குடோனில் வைத்து வியாபாரம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து வந்தவாசி நகராட்சி ஆணையாளர் உஷாராணி மற்றும் வந்தவாசி இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலையில் அந்த கடையை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்