பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்

கொரரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், பொதுமக்கள் அடிக்கடி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-05-13 12:36 GMT
ராணிப்பேட்டை
 கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முக கவசம்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் அடிக்கடி வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு, கை கால், முகங்களை சோப்பு நீரினால் சுத்தம் செய்ய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். 

தினமும் காலை 7 மணி அளவில் சூரிய ஒளி நமது உடலில் படும்படி 5 நிமிடம் நிற்க வேண்டும். சூடான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மக்களின் உடல்நலம் குறித்து பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சை பெற தெரிவிக்கப்பட வேண்டும்.

வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்

கொரோனா வராமல் தடுக்க நமது முன்னோர்கள் கடைபிடித்த சித்த வைத்திய முறைகளை கையாள வேண்டும். மேலும் முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டையினை பயன்படுத்தி சிகிச்சை பெற முதல்-அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரானா வைரசில் இருந்து விடுபடுவோம். நகராட்சி மற்றும் ஊராட்சிகள் மூலம் வழங்கப்படும் கபசுரக் குடிநீர் அனைவருக்கும், வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்படும். 

மேலும் கொரோனா வைரஸ் நிவாரணத் தொகை ரூ. 2,000 வழங்கப்படும் நேரத்தில் மக்கள் அதிகமாக கூடாமல் வழங்கப்படும் டோக்கன்களை எடுத்துச் சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரணத்தொகை பெற வேண்டும். கொரோனா எனும் பெருந்தொற்றில் இருந்து காத்துக்கொள்வோம். அரசின் வேண்டுகோளை ஏற்று நடப்போம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்