சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் நிலங்களை மீட்க கோரி வழக்கு; அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.
கோவில் அறங்காவலர்களாக இருந்தவர்களில் சிலர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தனர். இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில் நிலங்களில் அறநிலையத் துறை அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆனால், காரணீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக கட்டுமானங்களை எழுப்பியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட இந்த கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் 2-வது வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.